“வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்று வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“போர் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களில் நூற்றுக்கொருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு, ஓகஸ்ட் 30 ஆம் திகதி புதன்கிழமை வவுனியாவில் பெரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவை பிரதானப்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் போராட்டங்கள் நடத்தவுள்ளோம்.
வடக்கில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 150 நாட்களையும் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக, 30ஆம் திகதி மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்தப் போராட்டங்களில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – என்றார்.