எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பொலித்தீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பன தடைசெய்யப்படவுள்ளது.
இதேவேளை, இதற்கெதிராக கைது செய்யும் சட்டநடவடிக்கைகள் உடனடியாக இடம்பெறாது என்று இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இத்துறையை சார்ந்தவர்களின் நலன் கருதி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வற்காக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2017.07.11 ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில வகையான பொலித்தீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பவற்றை தடைசெய்யும் தீர்மானத்தினை செயற்படுத்துவதற்கும்,
அத்தடையினை செயற்படுத்துவதனால் பாதிப்படைகின்ற பொலித்தீன் உற்பத்தி தொடர்பான அனைத்து தரப்பினரையும் முறையான முறையில் மாற்று முறையொன்றுக்கு உள்வாங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன் பாவனை தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டம் அவ்வாறே செயற்படுத்தப்படுவதுடன், அத்தியாவசிய செயற்பாடுகளுக்காக அந்த மட்டத்தை விட குறைவான பொலித்தீனைப் பயன்படுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும்.
மீள் சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை முற்றாகத் தடை செய்வது நீண்ட கால யோசனையாகும்.