வடக்கு மாகாண சபையில் புதிய அமைச்சரவை! – ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண வைபவத்துடன் பொறுப்பேற்றது.
ஏற்கனவே அமைச்சராக இருக்கும்  கந்தையா சர்வேஸ்வரனுக்கு மேலதிகமாக முதல்வர் விக்னேஸ்வரனும், அமைச்சர் அனந்தி சசிதரனும் புதிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றனர். அதனால் அவர்கள் இருவரும், அத்துடன் புதிதாக அமைச்சர் பதவிகளை ஏற்ற ரெலோவின் ஞானசீலன் குணசீலன், புளொட்டின் கந்தையா சிவநேசன் ஆகியோரும் இன்று  தத்தமது பொறுப்புகளை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் உட்பட 5 பேர் அடங்கிய அமைச்சர் வாரியப் பட்டியலை  வடக்கு ஆளுநருக்கு அனுப்பிவைத்திருந்தார்.
அதனடிப்படையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புதிய அமைச்சர் வாரியச் சத்தியப்பிரமாணத்துக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேரம் ஒதுக்கிக்கொடுத்திருந்தார்.
தற்போதைய கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனின் அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் ஏதும் இல்லாதமையால் அவர் இன்று புதிதாக சத்தியப்பிரமாணம் செய்யவில்லை.
எனினும், தற்போது அமைச்சுப் பொறுப்புகளை வைத்திருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும், அனந்தி சசிதரனும் புதிதாக அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவிருப்பதால் அந்தப் பொறுப்புகளை ஏற்று நேற்று சத்தியப்பிரமாணம் செய்தனர்.
அவர்களுடன் குணசீலனும், சிவநேசனும் இன்று புதிதாக அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தனர்.
அந்தவகையில் வடக்கு மாகாண நிதி திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி விவகாரம், வீடமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், சுற்றுலாத்துறை, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் சத்தியப்பிரமாணம் செய்து கடமைகளைப் பொறுப்பேற்றார்.
சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞானசீலன் குணசீலனும், பெண்கள் விவகாரம், புனர்வாழ்வு, சமூகசேவை, கூட்டுறவு, வர்த்தக வாணிபம், உணவு வழங்கல் விநியோகம் சிறுதொழில் முயற்சி ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக அனந்தி சசிதரனும்  ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர்.
அத்துடன், அனந்தி சசிதரனின் அமைச்சுக்குரிய செயலாளராக  ஆர்.வரதீஸ்வரனும், கந்தையா சிவநேசனின் அமைச்சுக்குரிய செயலாளராக எஸ்.சத்தியசீலனும், முதலமைச்சரின் அமைச்சுக்குரிய செயலாளராக ரூபினி வரதலிங்கமும் தமது நியமனக் கடிதங்களை ஆளுநரிடமிருந்து நேற்றுப் பெற்றுக்கொண்டனர்.
த.குருகுலராஜா பதவி விலகியதால் ஏற்பட்ட கல்வி, பண்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பொறுப்புகள் கந்தையா சர்வேஸ்வரனுக்கு வழங்கப்பட்டதுடன், அவர் அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிக்கின்றார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து வடக்கு மாகாண அமைச்சர்களாக செயற்பட்ட பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராஜா ஆகியோர் பதவியிலிருந்து விலகினார்கள்.
அத்துடன், குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியை இராஜிநாமா செய்திருந்ததுடன், மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராகச் செயற்பட்ட பா.டெனீஸ்வரன் அவரது கட்சியான ரெலோ  விடுத்த கோரிக்கைக்கமைய அமைச்சு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நான்கு அமைச்சர்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவநேசனுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கடிதம் வரைந்த முதல்வர் விக்னேஸ்வரன், ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் படுகொலையுடன் சிவநேசன் சம்பந்தப்பட்டிருக்கின்றார் எனப் பேச்சடிபடுகின்றமையால் அவருக்கு அமைச்சர் பதவியைத் தருவதற்குத் தம்மால் முடியாதிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது அவருக்கே விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியை முதலமைச்சர் வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *