மூவரடங்கிய குழுவின் இறுதி முடிவு இன்று! – கூடுகிறது ஐ.தே.கவின் நாடாளுமன்றக்குழு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில்,  நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறித்த விசாரணை அறிக்கையும் இதன்போது சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போது நீதி அமைச்சர் விஜயதாஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரமசிங்க, கபீர் ஹாசீம் ஆகியோரை உள்ளடக்கி மூவரடங்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
குறித்த குழுவால் மூன்று நாட்களாக விசாரணைசெய்யப்பட்ட அறிக்கை இன்றைய நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எனினும், தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தவறான கருத்துகளைப் பதியவில்லை. கட்சி, நிறங்களைவிட நாடுதான் முக்கியம். எனது அமைச்சுப் பதவி குறித்து ஜனாதிபதியால் இறுதித் தீர்மானம் எடுக்கமுடியும் என்று விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விஜயதாஸ ராஜபக்ஷ கட்டாயம் இராஜிநாமா செய்வார் என்று பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *