Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ‘ட்ரயல் அட்பார்’ யோசனை ராஜிதவின் அப்பாவித்தனத்துக்கு எடுத்துக்காட்டு! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி 

‘ட்ரயல் அட்பார்’ யோசனை ராஜிதவின் அப்பாவித்தனத்துக்கு எடுத்துக்காட்டு! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி 

ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ‘ட்ரயல் அட்பார்’ நீதிமன்றம்  அமைக்கப்படவேண்டுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியிருக்கும் யோசனை அவரது அப்பாவித்தனத்துக்கு நல்லதொரு உதாரணமென மஹிந்த அணியான பொது எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“ராஜித நினைப்பதுபோல தனி நீதிமன்றம் என்பது கிள்ளுக்கீரை வியாபாரமல்ல. தனிநபரொருவர் மீதோ அவரது குடும்பத்தினர் மீதோ சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி நீதிமன்றமொன்றை அமைக்க எந்தச் சட்டத்திலும் இடமில்லை என்பது அவருக்குத் தெரியாமல் போயிருக்கின்றது. இந்த உண்மை அவருக்குத் தெரியவந்தபின் தனி நீதிமன்ற கற்பனையைக் கைவிட்டுவிட்டு ‘ட்ரயல் அட்பார்’ விசாரணையை நடத்தலாம் என மாற்று யோசனை தெரிவித்திருக்கிறார். அந்த யோசனை அவரது அப்பாவித்தனத்துக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
‘ட்ரயல் அட்பார்’ நீதிமன்றமொன்று பொதுவாக விசேட கொலை வழக்குகளை விசாரிப்பதற்காக மாத்திரமே அமைக்கப்படும். முன்னைய அரசு  அதிலும் குறிப்பாக, ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் அமைக்கப்படவேண்டுமென்பது சுத்த பித்துக்குளித்தனம்.
ராஜித நினைப்பதுபோல தனி நீதிமன்றம், “ட்ரயல் அட்பார்’ நீதிமன்றம் என்று எங்களை மிரட்டவோ அடிபணிய வைக்கவோ நாங்கள் இடமளிக்கமாட்டோம். பிரதம நீதியரசரும் சட்டமா அதிபரும் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே “ட்ரயல் அட்பார்’ நீதிமன்றத்தை அமைக்கமுடியும்.
எனவே, அமைச்சரவை இணைப் பேச்சாளர், சுகாதார அமைச்சர் என்ற முக்கிய பதவிகளை வகிக்கும் ராஜித சேனாரத்ன ஓரளவாவது சட்டம் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எங்களது அபிலாஷை” என்று பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …