2020 வரை தேசிய அரசு தொடரும்: சரத் அமுனுகம

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பொருளாதார வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் துரிதப்படுத்தும் வகையில் தேசிய பொருளாதார சபையொன்றை அமைப்பதற்கு தேசிய அரசின் பிரதான இரண்டு கட்சிகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் சரத் அமுனுகம கூறியுள்ளார்.

அத்துடன், இவ்விரு கட்சிகளுக்குமிடையிலுள்ள பொருளாதார முரண்பாடுகளையும், கொள்கை முரண்பாடுகளையும் தீர்த்துக்கொள்ளும் வகையில் தேசிய பொருளாதார சபை உருவாக்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசில் கொள்கை ரீதியில் பல வேறுபாடுகள் உள்ளன.

அமைச்சரவையில் சில தீர்மானங்களை எடுக்கும்போது அனைவரினதும் இணக்கப்பாட்டுடனையே எடுக்கப்படுகின்றது. எதிர்ப்புகள் ஏதும் இருப்பின் அமைச்சரவையிலேயே தெரிவிக்கவேண்டும்.

தேசிய பொருளாதார சபை மூலம் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்த முடியும். தேசிய அரசின் ஆயுட்காலம் தற்போது அரைவாசி முடிந்துள்ளது. கட்டாயம் 2020ஆம் ஆண்டுவரை இந்த அரசு தொடரும்.

அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளில் துரிதமான அபிவிருத்தியை மக்களுக்குக் கொண்டுசெல்லும் நோக்கிலேயே தேசிய பொருளாதார சபை அமைக்கப்படுகின்றது. அமைச்சரவை இதற்கான அனுமதியைக் கொடுத்துள்ளது.

இந்தச் சபையில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் குறித்த அமைச்சுகளின் செயலாளர்கள் எனக் குறிப்பிட்ட சிலர் அங்கம் வகிப்பர். தேசிய அரசின் பிரதான இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் அங்கம் வகிப்பதால் பொருளாதாரக் கொள்கைகள் ரீதியான கருத்து முரண்பாடுகளுக்கு இதன்மூலம் தீர்வு கிடைக்கும். சர்வதேச மற்றும் தேசிய பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

தேசிய பொருளாதார சபை புதிய விடயமல்ல. இது இந்தியாவில் உள்ளது. அதேபோல் ஐரோப்பிய நாடுகள், சீனா என பல நாடுகளில் உள்ளது. இலங்கையில் டட்லி மற்றும் சிறிமாவோ அரசில் இவ்வாறு தேசிய பொருளாதார சபை அமைக்கப்பட்டிருந்தது.

நிதி முகாமைத்துவம், உட்கட்டுமானங்களை சிறந்தமுறையில் கையாளும்போது அந்நிய முதலீடுகளை ஈர்க்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *