தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த யார்வேண்டுமானாலும், அவர்கள் எந்த மட்டத் தலைவர்களாக இருந்தாலும் சந்தித்து விவாதிக்கலாம் என்று தெரிவித்தார் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பான விடயங்கள் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைமை மட்டத்தில்தான் ஆராயப்படவேண்டுமே தவிர, மாவட்ட மட்டத் தலைவர்களினால் அல்ல என்று ரெலோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள் வவுனியாவில்கூடி கூட்டமைப்பின் அரசியல் குறித்துக் கலந்துரையாடியதுடன் தமக்கிடையில் இணைந்து செயற்படவும் முடிவு செய்தனர்.
இது ஏற்கப்படக்கூடியதல்ல என்று அதற்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார் ரெலோவின் செயலாளர் ந.சறீகாந்தா. இத்தகைய நடவடிக்கைகள் கட்சித் தலைமை மட்டத்திலேயே மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
அவரது கருத்தை மறுத்துள்ள புளொட் தலைவர் சித்தார்த்தன், “மாவட்ட மட்டத்தில் மட்டுமல்ல அதன் கீழே உள்ள எந்த மட்டங்களிலும் இது பேசப்பட வேண்டும்” என்றார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையக் கூடாது என்பது எமது நிலைப்பாடு. இதனை நான் பல தடவைகள் கூறியிருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் தலைமை எடுக்கும் முடிவு தவறு என்ற விமர்சனங்கள்கூட உண்டு. எனவே அதற்குக் கீழான ஒவ்வொரு மட்டங்களிலும் கூட்டமைப்புத் தொடர்பில் பேசுவதில் தவறில்லை. எந்தக் கட்சியினர் கூப்பிட்டாலும் சென்று பேசுங்கள் என்று நான் எனது மாவட்டத் தலைவர்களுக்குக் கூறியிருக்கின்றேன். கருத்துக்களைக் கேட்பதில் – கலந்துரையாடுவதில் தவறில்லை. முடிவு எடுக்கப்படும்போது கட்சித் தலைமையுடன் பேசித்தான் முடிவு எடுக்கவேண்டும்” – என்றார் சித்தார்த்தன்.