மூவின மக்களுக்கும் பாகுபாடின்றி அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்! – ரணில் உறுதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குத் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடையவேண்டும்” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவுசெய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனது 40 வருடகால நாடாளுமன்ற சேவையைப் பாராட்டி விசேட சபை அமர்வை கூட்டி விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதற்கும், விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தேர்தலில் போட்டியிடுமாறு மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவே எனக்கு ஆலாசனை வழங்கினார். இதற்காக அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அவரிடமிருந்து நிறைய அனுபங்களை இளைஞராக இருந்த காலத்தில் எனக்கும், எனது சகாக்களுக்கும் பெறக்கூடியதாக இருந்தது. அதன்பிறகு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் கீழும் செயற்படக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இவ்விரு தலைவர்களிடமிருந்தும் பல விடயங்களைக் கற்கக்கூடியதாக இருந்தது. அதற்காக அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

எதிர்வரிசையில் இருப்பதையும் சகித்துக்கொண்டோம். எதிர்வரிசைக்குச் செல்வதென்பது, வலகம்பாகு மன்னன் காட்டுக்குபோனதுபோல் ஓர் அனுபவமாகும். அதனால், எதிரணி எப்படி என்பது எமக்கு மட்டுமே தெரியும்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவும் 40 ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர். சிரேஷ்ட உறுப்பினர்களாக அவர்கள் இருவரும் இருக்கின்றனர். எனினும், என்னைபோல் இவ்விருவரும் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் அங்கம் வகிக்கவில்லை.

கொள்கை அடிப்படையில் தனது கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எம்.பி. பதவியைத் துறந்து அன்று நாடாளுமன்றத்திலிருந்து சென்றார். இனப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி பேசப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் மீண்டும் நாடாளுமன்றம் வந்தார். பயங்கரவாத பிரச்சினை காரணமாக ஒருதடவை அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

அதேபோல் காமினி ஜயவிக்கிரம பெரேரா முதலமைச்சராக தெரிவாகிச்சென்றார். சிறந்த முதலமைச்சராகச் செயற்படுவது எப்படி என்று காண்பித்தார். ஒருவர் கொள்கைக்காகவும், மற்றையவர் அபிவிருத்திக்காகவும் இந்த அவையிலிருந்து சென்றனர்.

நாட்டில் போர் முடிவடைந்துவிட்டது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும், பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறியதுபோல் ஒன்றுடனொன்று தொடர்புபட்டதாகவே இருக்கின்றது.

எனவே, சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாம் இலங்கையராக பயணிக்கவேண்டும். அதற்குரிய அர்ப்பணிப்பை தேசிய அரசு செய்துள்ளது.

எந்தவொரு பிரஜைக்கும் துளியளவேனும் பாகுபாடு இல்லாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடையவேண்டும்.

அதேபோல் பிரதான இருகட்சிகளும் அரசில் இருக்கின்றன. எனவே, பின்நோக்கிப் பாராது, துணிவுடன் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து நாட்டின் நிலையானதொரு வளர்ச்சிமிகு அபிவிருத்திக்கு அடித்தளமிடவேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்கான கேந்திர நிலையமாக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தவேண்டும்.

ஒழுக்கம், பொறுமை, பொறாமையின்மையுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவேண்டும், வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் சமனாக மதிக்கவேண்டும் ஆகிய ஆலோசனைகளை என்னால் வழங்கமுடியும்” – என்றார்.

அதேவேளை, தனது பெற்றோர், மனைவி, கட்சித் தொண்டர்கள், உறுப்பினர்கள் உட்பட தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் ரணில், தனது அரசியல் வாழ்வில் தான் கடந்துவந்த பாதையையும், கண்ட சம்பவங்களையும் சுருக்கமாக விவரித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *