யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இனந்தெரியாத இளைஞர்கள் குழுவினரால் துரத்தித் துரத்தி வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் இருவரும் கொக்குவில், பொற்பதி வீதிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் மோட்டார் சைக்கிளில் கண்காணிப்புப் பணியில் சென்றுகொண்டிருந்தபோதே இந்தத் துணிகரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இரண்டு பொலிஸாரும் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
5 மோட்டார்சைக்கிள்களில் வந்த 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தித் துரத்தி இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் மற்றும் சிங்கள பொலிஸார் இருவர் மீதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இரு பொலிஸாரும் துப்பாக்கி கொண்டுசெல்லாமல், பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோதே அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவினர் பின்தொடர்ந்து சென்று வாளால் வெட்டியுள்ளனர்.
சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு உடன் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த பொலிஸார் இருவரையும் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.