வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுழற்சிமுறை நியமன ஆசன விடயத்தில், புளொட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவரான ஆர்.ஜெயசேகரத்தின் பெயர் தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் சுழற்சி முறை ஆசனத்தின் அடிப்படையில் பதவி வகித்த வவுனியா மாவட்ட உறுப்பினர் மயூரன், மாகாண சபையின் நூறாவது அமர்வுடன் விடை பெற்றார். மாகாண சபையில் நன்றியுரையும் நிகழ்த்தினார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு நியமன ஆசனங்கள் கிடைத்தன. ஓர் ஆசனம் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணிக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் இடையே சுழற்சிமுறையில் பங்கீடு செய்யப்பட்டது.
சுழற்சி முறையில் நியமன ஆசனம் தமது கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என்று புளொட் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வடக்கு மாகாண சபையின் நியமன ஆசனத்துக்கு, மாகாண சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர்.ஜெயசேகரத்தின் பெயரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. தேர்தல்கள் திணைக்களம் அதனை ஏற்றுக் கொண்டு, வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் பிரதி வடக்கு மாகாண சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற நூறாவது அமர்வில் பங்கேற்க மயூரன் வந்தார். அவரது ஆசனத்துக்குப் புதியவரின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளமையினால் அவரைச் சபை அமர்வில் பங்கேற்க அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் சர்ச்சை எழுந்தது. இறுதியில் மயூரன் சபை அமர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.
எமக்கான சந்தர்ப்பம்
மறுக்கப்பட்டுள்ளது
இதேவேளை, வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு, தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“தமிழரசுக் கட்சியின் மிக மூத்ததலைவர் என்றவகையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதறடித்துவிடாது இணைத்துவைத்திருக்கும் ஆற்றல்கொண்ட தலைவர் என்றவகையிலும் தமிழரசுக்கட்சியின் மிகப் பிந்திய செயற்பாடான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு சுழற்சி முறையிலான ஆசனத்தை முறைகேடாக இரண்டாவது தடவையும் வழங்கும் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு உரிமையுடனும், ஒற்றுமையின் பெயரிலும் தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.