காணாமல்போன படையினர் குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டுமாம்! – மஹிந்த அணியின் கோரிக்கை இது .

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அலுவலகம் அமைக்கப்படுமாக இருந்தால் காணாமல்போன படையினர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மஹிந்த அணி கூறியுள்ளது.

மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம அரசிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“நாம் இன்று யுத்தத்தையும், யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஷவையும் மறந்துவிட்டே பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்த அரசு இவ்வளவு தூரமேனும் பயணிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமைதான். இப்போதே இந்த அரசு தடுமாறிக்கொண்டிருக்கின்றதே. யுத்தம் மட்டும் முடியவில்லையென்றால் இந்த அரசின் நிலைமை என்னவாகியிருக்கும்?

இந்த அரசுடன் சர்வதேசம் நட்புறவு கொண்டாடுகின்றது என்றும், மஹிந்த சர்வதேசத்தை தவிர்த்துச் செயற்பட்டார் என்றும் கூறுகின்றார்கள். அப்படி சர்வதேசம் மஹிந்தவுடன் கோபித்துக்கொள்வதற்கு மஹிந்த செய்த குற்றம் என்ன? யுத்தத்தை முடித்துவைத்தமைதான் அவர் செய்த குற்றம்.

ஜே.ஆர். நினைத்திருந்தால் அன்றே யுத்தத்தை முடித்திருக்கலாம். பிரபாகரன் வடமராட்சியில் சுற்றிவளைக்கப்பட்டபோது போர் முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், இந்தியா அதற்கு இடங்கொடுக்கவில்லை. ஜே.ஆரை மிரட்டி யுத்தத்தைத் தொடர வைத்து பிரபாகரனைத் தப்பிக்க வைத்தது இந்தியா.

மஹிந்தவுக்கும் அவ்வாறான அழுத்தங்கள் வந்தபோதிலும் அவர் அதற்கெல்லாம் அடிபணியவில்லை. இதனால்தான் சர்வதேசம் மஹிந்தவை எதிரியாகப் பார்க்கத் தொடங்கியது. முப்பது வருட கால யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றுதான் பலர் காணாமல்போனமை.

காணாமல்போன தமிழர்கள் தொடர்பில் சர்வதேசமும் இலங்கை அரசும் அதிக ஆர்வம்கொள்கின்து. இது தொடர்பில் அலுவலகமொன்றை அமைத்து விசாரணை நடத்துவதற்காக சட்டமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், காணாமல்போன படையினரை இவர்கள் மறந்துவிட்டனர் அல்லது வேண்டுமென்றே தவிர்த்துவிட்டனர்.

நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுமாக இருந்தால் காணாமல்போன படையினர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *