சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நன்றி – ஞானதேசிகன், அதுல் ஆனந்த்
தங்கள் மீதான சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகியோர் நன்றி கூறியுள்ளனர்.
சஸ்பென்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகிய இருவரும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் போய்ப் பார்த்து நன்றி கூறினர். தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர் ஞானதேசிகன். தமிழக அரசின் தலைமைச் செயலாளராகவும் இருந்தவர். தமிழக அரசின் நிதித்துறை, உள்துறைகளில் பணியாற்றியவர். கடந்த 2011-14 ம் ஆண்டுகளில் மின்வாரிய தலைவராக செயல்பட்டார். அதன்பிறகு 2.12.14ல் தலைமை செயலாளராக ஞானதேசிகள் நியமிக்கப்பட்டார்.
ஆனால் திடீரென 2016ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி இவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அவருடன் சுரங்கத்துறை கமிஷனராக இருந்து வந்த அதுல் ஆனந்த்தும் சஸ்பெண்ட் ஆனார்.
இந்த நிலையில் தற்போதைய மாறிய அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இந்த இருவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து ஞானதேசிகன், அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தின் இயக்குநராகவும், அதுல் ஆனந்த் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இருவரும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு நன்றி கூறிக் கொண்டனர். அவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.