யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றுப் பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினால்
யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது – 24) என்ற இளைஞர் பல மணி நேர உயிர்ப் போராட்டத்தின் பின்னர் நேற்று முன்னிரவில் உயிரிழந்தார்.
நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் படுகாயமடைந்த இந்த இளைஞருக்கு நெஞ்சின் சுவாசப்பைப் பகுதியில் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்துள்ளன எனவும், கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது எனவும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அடுத்தடுத்து அவருக்கு இரண்டு சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்ட போதிலும் உயிர்க் காப்பு
முயற்சி பலனளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது.
இவரும், நிஷாந்தன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தன்னால் அடையாளம் காட்டமுடியும்
என்று நிஷாந்தன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.