வித்தியா படுகொலை வழக்கு: சி.ஐ.டியின் விசாரணைக்கு சமுகமளிக்காத விஜயகலா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்க, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டபோதும், அவர் விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை என்று தெரியவருகின்றது.

பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில், வடக்கு மாகாணத்தின் முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைதுசெய்யப்பட்டிருந்தார். ஊர்காவற்துறை நீதிமன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் முற்படுத்தப்பட்டார். லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள் மன்றில் காணொளி ஒன்றைக் காண்பித்திருந்தனர்.

அதில் சுவிஸ்குமாரை மக்கள் மின்கம்பத்துடன் கட்டிவைத்துள்ளமையும், இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அங்கு பிரசன்னமாகுவதும் உள்ளது. இதனையடுத்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரை, காணொளியை ஆய்வு செய்யுமாறு நீதிமன்றம் பணித்தது.

இந்தக் காணொளி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஆராயப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனை வாக்குமூலம் பெற்றுக்கொள்ளக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவர் வாக்குமூலம் வழங்கச் செல்லவில்லை என்று தெரியவருகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *