தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றச்சாட்டு

பொறுப்புக் கூறும் விடயத்தில் உதாசீனமாக இருந்துவரும் ஸ்ரீலங்காவை ஐ.நா வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கு இருந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் தவறவிட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெனீவாவில் நடந்துமுடிந்த ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவிற்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிகளான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றி, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரும், தமிழ் தலைமைகளின் செயற்பாடும் என்ற பொருளில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பின் மீது இந்த பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கின்றார்.

கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைகளால் கடும் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்கள் தற்போதைய ரணில் – மைத்ரி அரசாங்கத்தை மாத்திரமன்றி அவர்களுடன் சேர்த்து எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனையும் அரசியல் ரீதியாக தோற்கடிப்பார்கள் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கின்றார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *