காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி மருதங்கேணியிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினது போராட்டம் வடக்கில் ஏற்கனவே 3 மாவட்டங்களில் தொடரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் மருதங்கேணியில் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக உள்ள மரம் ஒன்றின் கீழ் நேற்றுப் புதன்கிழமை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய பதில் வழங்க வேண்டும், அவர்களை மீண்டும் எம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரியே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமன்றி, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், சர்வதேச விசாரணை கட்டாயமாக நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு கோரி வடக்கில் ஏற்கனவே கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.





