மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி
மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களைப் பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இந்த நடவடிக்கை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளின் அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பறிக்கப்படுவதை தடுக்க மாகாணசபைகளில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஏனைய முயற்சிகள் தோல்வியடைந்தால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டடங்களுக்கான திட்டங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு அனுமதி அளித்தல், எரிபொருள் நிலையங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை கட்டுதல் என்பனவற்றுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை பெப்ரவரி 1ஆம் நாள் ஸ்ரீலங்கா அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அளித்துள்ளது.
இந்த அனுமதிகளை வழங்கும் கடமை மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளிடமே இருந்து வந்தது.
13ஆவது திருத்தச்சட்டத்தின் விளைவாக மாகாணசபைகள் சட்டத்தின் கீழ், இந்த அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை தன்னிச்சையாக மாற்ற முடியாது. இதற்குப் பதிலடியாக, குப்பைகளை அகற்றுதல், நீர்விநியோகம் போன்ற ஏனைய பொது வசதிகளில் இருந்து ஒதுங்க நேரிடும் என்று மேல் மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் இந்த செயற்பாட்டை தடுப்பற்கான சட்டங்களை அறிமுகப்படுத்த, எமது அதிகாரங்களை பயன்படுத்துவோம் என்று தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரங்களை மாகாணசபைகள் 30 ஆண்டுகளாக அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை அதிகாரப் பகிர்வு கொள்கைக்கு எதிரானது என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அண்மையில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.