மைத்திரி தனது நண்பர் ராஜிதவை காப்பாற்ற முயற்சிக்கின்றார்: அநுர குமார குற்றச்சாட்டு
தனது நண்பரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவை பாதுகாக்கும நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சைட்டம் சர்ச்சை தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடாமல் மௌனியாக இருப்பதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது.
சைட்டம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளக் கூடாதென தற்போதைய ஜனாதிபதி, சுகாதார அமைச்சராக இருந்த சமயத்தில் அவராலேயே நியமிக்கப்பட்ட குழு வலியுறுத்தியிந்த நிலையில் இன்று ஏன் அவர் அது தொடர்பில் கருத்து வெளியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
சைட்டம் பல்கலைக்கழக பிரதான நிறைவேற்று அதிகாரி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அநுர குமார திஸாநாயக்க “அரசாங்கம் மாணவர்களின், பொது மக்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுக்காமல் சைட்டம் முதலாளியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க ஆரம்பித்துள்ளது. ஆகவே இந்த சூழ்ச்சி நடவடிக்கைகளை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் என்ன நடைபெற்றாலும் தனது கருத்தினை வெளியிட்டிருந்தார். ஒரு சிறிய சம்பவத்திற்கும் தனது கருத்தினை முன்வைத்திருந்தார் எனினும் சைட்டம் தொடர்பில் அவர் வாய்த்திறகவில்லை.
தற்போதைய ஜனாதிபதி சுகாதார அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் அவர் நியமித்த குழுவே சைட்டத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளக்கூடாது என பரிந்துரைத்திருந்தது. ஆகவே ஜனாபதிபதி உடனடியாக தனது கருத்தினை வெளியிட வேண்டும். அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிடும் ஜனாதிபதி இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
அவர் தனது நண்பரை பாதுகாக்க முயற்சிக்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால தனது நண்பர் ராஜித சேனாரத்னவை பாதுகாக்கும் பொருட்டு தன்னை சந்திக்க வரும் தரப்பினர், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றார்.“ எனக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அநுர குமார திஸாநாயக்க, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அநுர குமார திஸாநாயக்க “சைட்டம் பல்கலைக்கழக பிரதான நிறைவற்று அதிகாரி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விரிவான விசாரணைகள் அவசியம். முறையான விசாரணைகள் நடைபறெவில்லையின் இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றதோ என் சந்தேகம் சாதாரணமே. எமது பொலிஸில் மிகச் சிறந்த அதிகாரிகள் காணப்படுகின்றார்கள். நாட்டில் நடைபெற்ற பல சட்டவிரோத செயல்கள் அவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
அவ்வாறு உண்மைகள் வெளிவராத பல படுகொலைகளின் பின்னணில் அரசியரல்வாதிகள் இருந்திருக்கின்றார்கள். பிரகீத் எக்நெலிகொட, லசந்த விக்ரமதுங்க படுகொலை உள்ளிட்ட பல படுகொலைகளின் பின்னணில் அரசாங்கம் இருந்தமையாலேயே உண்மைகள் வெளிவரவில்லை. ஆகவே கண்டுபிடிக்க முடியாத பல கொலைகளுக்கு பின்னால் அரசாங்கம் இருப்பது தெளிவாகின்றது.“
இதுவேளை ஊடகவியலாளர் ஒருவர் இந்த ஊடக சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அநுர குமார திஸாநாயக்க சைட்டம் பல்கலைக்கழக பிரதான நிறைவேற்று அதிகாரி ஒரு வைத்தியர் அல்லவெனவும் குற்றம்சாட்டினார்.
அநுர குமார திஸாநாயக்க “சமீர சேனரத்ன ஒரு வைத்திர் அல்ல அவர் ரஷ்யாவிற்கு வைத்திய படிப்பிற்காக சென்று பல தடவைகள் பரீட்சையில் தோல்வியடைந்தவர். இலங்கை வைத்திய சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியரல்ல அவர் எனினும் தனது காரில் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் இலட்சினையை ஒட்டிவைத்துள்ளார். சைட்டம் ஒரு விசித்திரமான இடம். குற்றச் செயல்களை நடைமுறைப்படுத்தும் மாபியா குழுவின் தலைமையகவே சைட்டம்.“