விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி : தயாசிறி
சாதாரண தமிழ் மக்கள் சமாதானமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்து, ஒற்றையாட்சியின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல தயாராக இருக்கின்றனர் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்- சிங்கள நல்லுறவை குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். புலி ஆதரவாளர்களினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உந்துதலுக்கு ஏற்பவே அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
இவரின் கருத்துக்களால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் நாம் இருமுறை சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் சாதாரண தமிழ் மக்களின் அபிப்ராயத்திலிருந்து மாறுபட்ட கருத்தையே கொண்டுள்ளார். சாதாரண தமிழ் மக்கள் சமாதானமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்து, அவர்களின் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு ஒற்றையாட்சியின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல தயாராக இருக்கின்றனர். நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பாலான அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த எண்ணத்துடனேயே செயற்பட்டு வருகின்றனர்.
அதேபோன்று எமது நாட்டு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு சர்வதேசத்திலிருந்து நீதிபதிகளை கொண்டு வந்து எமது நாட்டில் அமர்த்துவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை.
ஆனால் வடமாகாண முதலமைச்சரின் இவ்வாறான மாறுபட்ட அர்த்தமற்ற பேச்சுக்கள் எமக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. அதுமாத்திரமின்றி இவரது செயற்பாடுகள் பிரிவினைவாதத்தை தோற்றம் பெறச் செய்கிறது’ என்றார்.