மக்களின் காணிகளில் தொடர்ந்தும் ராணுவம் இருப்பது கண்டனத்திற்குரியது: சிவமோகன்
யுத்தத்தினால் முகாம்களில் தங்கியிருந்து தற்போது மீள்குடியேற்றத்திற்கென சுமார் ஆறு வருடங்களாக மக்கள் காத்திருக்கும் போது, அவர்களுடைய காணிகளில் தொடர்ந்தும் ராணுவம் தங்கியுள்ளமை கண்டனத்திற்குரியதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவின் கீழுள்ள பிலவுக்குடியிருப்பு காணியை நேற்றைய தினம் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அவ்வாறு விடுவிக்கப்படாததால் மக்கள் அங்குள்ள ராணுவ முகாமை முற்றுகையிட்டு இரவு பகலாக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் காலை அங்கு சென்ற சிவமோகன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்தபின்னர் ஊடகங்களிடம் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் பொறுமை இழந்த நிலையிலேயே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்ட சிவமோகன், அதிகாரிகள் இக் காணி விடுப்பு தொடர்பில் இன்றே நடவடிக்கை எடுக்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.