அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை – புதிய சமரச திட்டம் தயாராகிறது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாளை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதிய சமரச திட்டம் தயாரிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி பழனிசாமி அணி அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

இதை தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக ஓ.பன்னீர் செல்வம் வரவேற்றுள்ளார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பேச்சுவார்த்தைக்கான குழு நாளை அமைக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக கட்சி மற்றும் ஆட்சியில் இரு அணியினரும் பங்கு பெறுவது தொடர்பான புதிய சமரச திட்டம் தயாராகி வருகிறது. தனிப்பட்ட யாரும் இனி அ.தி.மு.க.வில் முடிவு எடுக்க முடியாது. கூட்டுப் பொறுப்புடன் கூடிய குழுதான் முடிவு எடுக்கும். இதற்காக மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.

ஆட்சியைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் என்றும், எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சர் என்றும் ஒரு சமரச திட்டம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

சமரச திட்டத்தின்படி இன்று பேச்சுவார்த்தை தொடங்க இரு அணியினரும் நினைத்தனர். ஆனால், இன்று அஷ்டமி என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டது. எனவே, நாளை அதிகாரப்பூர்வமாக இரு அணியினரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *