தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்: ஆத்திரமூட்டல் செயல் என சீனா கருத்து

தென் சீனக் கடல் பகுதிக்குள் அமெரிக்கா தனது கடற்படையின் போர்க் கப்பலை அனுப்பியுள்ள நிலையில், இது ஆத்திரமூட்டும் நடவடிக்கை என சீனா கருத்து தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேலும் இப்பகுதியின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வந்தன.

இந்த நிலையில், தென் சீனக் கடல் பகுதி தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அந்த வழக்கின் முடிவில் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிற்கு உரிமை இல்லை என்று சர்வ தேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சர்வதேச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை ஏற்க மறுத்த சீனா தொடர்ந்து தென் சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடி வருவதோடு கடல் பகுதியில் தனது ராணுவ நிலைகளை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தக் கடல் பகுதி முழுவதையும் செயற்கைக் கோள் மூலம் கண்காணித்தும் வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா தனது கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலை தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு அனுப்பியுள்ளது. சீனா உருவாக்கி வரும் செயற்கை தீவுக்கு அருகே இந்த கப்பல் அனுப்பப்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்பு அமெரிக்கா தரப்பில் அனுப்பப்படும் முதல் போர்க்கப்பல் இது ஆகும். ஸ்ப்ராட்லி தீவில் உள்ள மிஸ்சீப் பகுதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமெரிக்க கப்பல் கண்காணிப்பு பணியை மேற்கொண்டது.

இதனையடுத்து அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஆத்திரமூட்டும் செயல் என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லு காங் கூறுகையில், “சீனாவின் அனுமதி இல்லாமல் தென் சீனக் கடல் பகுதியில் சீனக் கப்பல் நுழைந்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்க்கை சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலனுக்கு தீங்கு இழைக்கும் வகையில் உள்ளது. இந்த தவறினை அமெரிக்கா சரிசெய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *