இலங்கை மீது நடவடிக்கை எடுக்க விக்னேஸ்வரன் வலியுறுத்து!
ஐநாவில் ஒப்புக்கொண்ட விடயங்களை இதுவரை இழுத்தடித்து வந்த நிலையில் , தற்போது பிரேரணையிலிருந்து விலகியுள்ள இலங்கை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் தொடர்ந்து உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவில் ஒப்புக் கொண்டவற்றை இலங்கை இது வரையில் நிறைவேற்றாமல் உதாசீனம் செய்து வந்து நிலையில் ஒரு உறுப்பு நாடு தனது கடப்பாடுகளை மீற இன்று ஐக்கிய நாடுகள் இடமளித்தால் நாளை இந்த உலக நிறுவனத்தின் சாவு மணியைக் கேட்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1, 34/1 மற்றும் 30/1 பிரேரணைகளுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதானது வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் உலகம் பூராகவும் உள்ள மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும் இவ்வாறான முடிவு வியப்படையத்தக்கதொன்றல்ல. தொடர் பத்தாண்டு கால கட்டத்தின் முடிவே ஜெனிவாவில் அமைச்சர் குணவர்தன வெளியிட்ட அறிவிப்பு என சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சமூகத்தினர் முன்னிலையில் தொடர்ந்து பத்தாண்டு காலமாக தனது கடப்பாடுகளைத் ஏற்றுவந்த இலங்கை அதே தொடர் ஒழுங்குடன் அவற்றிற்கு மதிப்புக் கொடுக்கத் தவறி வந்துள்ளது. இரு வருடங்கள் முடிந்து மேலும் கால அவகாசம் கொடுக்க விழைந்தபோது அக்காலகட்டத்தில் எம்முட் சிலர் அமெரிக்க பிரதிநிதியைச் சந்தித்து கடந்த இரு வருடங்களில் கண்கூடாக முன்னேற்றத்ததைக் காணமுடியாத நிலையில் மேலும் கால அவகாசம் கொடுப்பது அவசியமா என்று கேட்டிருந்தோம்.
தன் பாற்பட்ட பல கடப்பாடுகளை நிறைவேற்றாத இலங்கை, போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமாகப் பதிலளித்தலுக்கான பொறிமுறையொன்றை உருவாக்க தொடர்ந்து மறுத்து வந்தமை அதன் பிழையான செயல்களுள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
“பிரிவினைப் பயங்கரவாதஞ் சார்பாக 2009 மே மாதம் தொடக்கம் இன்று வரையில் இலங்கையில் ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை” என்று பெருமையுடன் கூறிய மதிப்பிற்குரிய அமைச்சர் குணவர்த்தன, அப்படியாயின் ஏன் 1979ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாத (தற்காலிக)த் தடைச் சட்டத்தை இதுவரை இலங்கை கைவாங்கத் தவறியுள்ளது என்பது பற்றிக் கூறத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“புதிய” கற்றுணர்ந்த பாடங்கள், மீள் நல்லிணக்க சமரச ஆணைக்குழுக்களை நியமிப்போம் என்று 2010ல் கூறிய கூற்றின் மறு உருவமே நேற்றைய தினம் (26.02.2020) உள்ளக விசாரணை ஆணைக்குழுவை நியமிப்போம் என்று ஜெனிவாவில் கூறிய கூற்று. இவ்வாறான உள்ளக விசாரணை ஆணைக்குழுவை அமைப்போம் என்ற இலங்கையின் புதிய கூற்று நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இனிவரும் பத்து வருடங்களில் கூட உண்மையைக் கண்டறிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாது என்பதே யதார்த்தம்.
எனவே ஐக்கிய நாடுகளின் ஒருமித்த கருத்தை உதாசீனம் செய்யும் இந்தச் செயற்பாடு சம்பந்தமாக போதுமான பதில் நடவடிக்கையை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் என்பதே எமது திடமான வேண்டுகோள்.
இந்நிலையில் தனது உலகளாவிய நியாயாதிக்க அதிகாரத்தைப் பாவிக்க வேண்டிய கடப்பாடு தற்போது சர்வதேச சமூகத்தைச் சார்ந்துள்ளது. அதைப் பாவித்து மிகக் கொடூரமான இவ்வாறான குற்றங்களைப் பற்றி ஆராயும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் அல்லது அதே மாதிரியான அதிகாரம் கொண்ட வேறு மன்றங்களின் முன் இலங்கையின் படையணியினரின் பணியாளர்களை நிறுத்த சர்வதேச சமூகமானது முன் வர வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பிரேரணைகளைத் தொடர்ந்து மதிக்காது மீறி வந்துள்ள இலங்கையின் நடத்தையையும் நாட்டின் மக்களிடையே குறிப்பிட்ட சில பகுதியினருக்கு எதிராக அரசாங்க அனுசரணையுடன் பலகாலமாக நடாத்தி வந்த தவறான செயல்பாடுகளையும் கணக்கில் எடுக்கும்போது இலங்கையை ஐக்கிய நாடுகள் பட்டய உறுப்புரை 6 ன் கீழ் முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றே நாம் நம்புகின்றோம்எனவும் குறிப்பிட்ட அவர், குறித்த உறுப்புரை 6 பின்வருமாறு-
“தற்போதைய பட்டயத்தில் கூறப்பட்டிருக்கும் கோட்பாடுகளைத் தொடர்ந்து மீறிச் செயற்படும் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் ஒருவரை பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் குறித்த நிறுவனத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் வெளியேற்ற முடியும்”
எனவே பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொது சபையானது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இலங்கை தொடர்ந்து உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் எனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்ஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
- வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
- வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
- தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
- கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




