Friday , January 24 2020
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / காணாமல்போனோர் உயிருடன் இல்லையா? துணிவிருந்தால் கோட்டா எம் முன் வந்து சொல்லட்டும்! – உறவுகள் ஆவேசம்
காணாமல்போனோர்
வடக்கில் போராடும் உறவுகள்

காணாமல்போனோர் உயிருடன் இல்லையா? துணிவிருந்தால் கோட்டா எம் முன் வந்து சொல்லட்டும்! – உறவுகள் ஆவேசம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
காணாமல்போனோர் உயிருடன் இல்லையா? துணிவிருந்தால் கோட்டா எம் முன் வந்து சொல்லட்டும்! – உறவுகள் ஆவேசம்

“எமது பிள்ளைகளை எப்போது? எத்தனை மணிக்கு? எங்கே? எவரிடம்? ஒப்படைத்தோம் என்ற விலாவாரியான விவரத்தைக் கோட்டாபயவுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம்”

“எங்கள் பிள்ளைகளை நாங்கள்தான் இராணுவத்திடம் கையளித்தோம். அவர்கள் சரணடைந்ததைக் கண்ட சாட்சியாக இன்னமும் நாங்கள் உயிருடன்தான் இருக்கின்றோம். இராணுவத்திடம் ஒப்படைத்த பிள்ளைகள் இறந்துபோனார்கள் என்று எப்படிச் சொல்லுவீர்கள். துணிவிருந்தால் கோட்டாபய நேரில் எங்கள் முன்வந்து சொல்லட்டும் பார்க்கலாம்.”

– இவ்வாறு காணாமல்போனோரின் உறவினர்கள் கோபாவேசத்துடன், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“காணாமல்போனவர்கள் உயிருடன் இல்லை. போரின் இறுதியில் சரணடைந்ததை நேரில் பார்த்தவர்கள் எவரும் இல்லை. கிராமத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு நாட்டின் ஜனாதிபதியின் பெயரே தெரியாது. அப்படியிருக்கையில் இந்த இராணுவ அதிகாரியிடம்தான் கையளித்தோம் என்று எப்படிச் சொல்வார்கள்” என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல்போனோரின் உறவினர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

“எங்கள் மனதை நோகடித்து விரைவில் எங்களைச் சாகடிப்பதற்காகவே பிள்ளைகள் உயிருடன் இல்லை என்று பொறுபற்றதனமாகச் சொல்கின்றனர். போரின்போது பலர் உயிரிழந்தது எங்களுக்குத் தெரியும். அவர்களின் பெற்றோர் சமூகத்தில் இருக்கின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர் இராணுவத்தினரிடம் நாங்கள் ஒப்படைத்த பிள்ளைகளைத்தான் கேட்கின்றோம்.

சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் கைதுசெய்த பிள்ளைகளைத்தான் கேட்கின்றோம். காயமடைந்து கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு காணாமல்போனவர்களைப் பற்றித்தான் கேட்கின்றோம். இவர்கள் எல்லோரையும் கொலை செய்துவிட்டீர்களா? முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய இவ்வாறு தெரிவித்த பின்னரும் எங்கள் மக்கள் பிரதிநிதிகள் மௌனமாக இருக்கக்கூடாது” என்று முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டனர்.

“எங்களை இரகசிய முகாம்களைப் பார்வையிட அனுமதியுங்கள். நாங்கள் எங்கள் பிள்ளைகளைக் கூட்டி வருகின்றோம். ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்து பிள்ளைகளை இராணுவத்தினர் பிடித்தனர். அப்படிப் பிடிக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்கள் எப்படி இறந்துபோனார்கள் ? விசாரணையின் பின்னர் விடுவதாகக் கூறித்தானே எங்கள் பிள்ளைகளைக் கூட்டிச் சென்றார்கள்.

இப்போது இறந்து போனார்கள் என்று எப்படி இவர்களால் சொல்ல முடிகின்றது? நாங்கள் எங்கள் பிள்ளைகளைப் பிணமாக அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. இந்தக் கதைகளைக் கோட்டாபய முடிந்தால் எங்கள் முன்பாக வந்து சொல்லட்டும். நாம் எமது பிள்ளைகளை எப்போது? எத்தனை மணிக்கு? எங்கே? எவரிடம்? ஒப்படைத்தோம் என்ற விலாவாரியான விவரத்தைக் கோட்டாபயவுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம்” என்று வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

“கோட்டாபய தடுமாற்றத்தில் இருக்கின்றார். அதனால்தான் இப்படி உளறிக் கொண்டிருக்கின்றார். எங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியின் பெயரும் தெரியும்; எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்த இராணுவ அதிகாரி தொடக்கம் சாதாரண சிப்பாய் வரையிலானவர்களின் பெயரும் தெரியும்.

நாம் ஒன்றும் கையளிக்காத பிள்ளைகளைப் பற்றியோ – சரணடையாத பிள்ளைகளைப் பற்றியோ கேட்கவில்லையே. அரசு அறிவித்தன் அடிப்படையில் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த எங்கள் பிள்ளைகளைப் பற்றித்தானே கேட்கின்றோம். எங்கள் பிள்ளைகளைத் தடுப்பில் வைத்திருக்கும் படங்கள் கூட வெளியாகியிருந்தன” என்று கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

Check Also

இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த

இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த நாட்டில் முஸ்லீம் தீவிரவாதத்தை அடியோடு இல்லாதொழிப்பதற்கு இராணுவத்தினருக்கு முழுமையான …

error: Content is protected!