சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு ஒருபோதும் இடமளிக்காது என்று புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
அத்துடன், கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல்,மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏன் ஸ்தம்பிதமடைந்துள்ளன என்பதை தான் ஆராய்வார் என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தலதா அத்துகோரள நேற்று தனது கடமைகளை நீதி அமைச்சில் வைத்து பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி: முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது. அமைச்சரவையில் இருப்பவர்கள் அதன் கூட்டுப்பொறுப்பை பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும். இரகசியத்தன்மையை மீறக்கூடாது.
கேள்வி: தற்போதைய அரசு ஆட்சிக்குவரும் முன்னர், கடந்த அரசுமீதும் ராஜபக்ஷக்கள்மீதும் கடுமையான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இரண்டரை வருடங்கள் கடந்தும் எவ்வித மோசடிகளும் இதுவரை வெளிகொண்டுவரப்படவில்லை. எனவே, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றே மக்கள் நினைக்கின்றனர். ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை இடம்பெறும் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறு நடக்குமா?
பதில்: நாட்டில் நீதிமன்றங்கள் உள்ளன. எதனையும் அமைச்சர்கள் தீர்மானிப்பதில்லை. நீதிக் கட்டமைப்பின் ஊடாகவே அது நடைபெறும். தற்போதுதான் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். காரணங்களைக் கண்டறிந்து அது தொடர்பான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுப்பேன்.
இருப்பினும், இது விடயத்தில் தாமதம் இருக்கின்றது என்பதே அனைத்து மக்களினதும் உள் கருத்தாக இருக்கின்றது.
ஊழல், மோசடிகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்பே நடவடிக்கை எடுக்கமுடியும்.
குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை உரிய சாட்சிகளும் உறுதிப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே வழக்கு தாக்கல் செய்யமுடியாது.
விசேட நீதிமன்றம் குறித்து நான் தீர்மானிக்க முடியாது. பிரதம நீதியரசர்தான் தீர்மானிக்க முடியும். நீதி அமைச்சர் இவ்வாறான தீர்மானங்கள் எடுத்த யுகம் முடிவடைந்துள்ளது. என்றுமில்லாதவாறு முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டபோது எவரும் பேசவில்லை. நல்லாட்சி ஏற்பட்டமையாலேயே ஊடகவியலாளர்களும் சுதந்திரமாகச் செயற்பட முடிகின்றது.
நீதிமன்றங்களுக்கு உள்ள சுதந்திரம் அவற்றிடம் உள்ளது. அதேபோல், அரச சேவையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உள்ள அதிகாரம் அவர்களிடம் உள்ளது. ஆனால், நிறைவேற்று அதிகாரத்தின்கீழ் இருந்த சட்டமா அதிபர் திணைக்களம் இன்று சுயாதீனமாக இயங்குவதை எவரும் மறக்கவேண்டாம்.
கேள்வி: இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று சர்வதேச சமூகம் குற்றஞ்சாட்டிவருகின்றது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராகவும் போர்க்குற்ற விசாரணை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வெளிவிவகார அமைச்சு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட இதனுடன் தொடர்புபட்ட சகல தரப்பையும் ஒன்றிணைத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணமுடியாதா?
பதில்: மின்சாரக் கதிரை தொடர்பில் முதலில் யார் பேசியது? தேர்தல் வெற்றியை முன்னிலைப்படுத்தி மின்சாரக் கதிரை என்ற புரளியைக் கிளப்பினர். தேர்தலில் இறுதிநேரத்தில் பிரசாரத்தைக் கொண்டுசெல்ல வழியின்றி நாட்டைப் பிரித்துவிட்டனர் என்று பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
கேள்வி: இறுதிப்போரின்போது 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சர்வதேச விசாரணையாளர்கள் போர்க்குற்ற பொறிமுறையில் பங்குகொள்வர் என்றும் ஜெனிவாத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதே?
பதில்: நாட்டின் சுயாதீனத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காகப் பாடுபட்ட எந்தவொருவரையும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிறுத்தி தண்டிக்கும் சந்தர்ப்பத்துக்கு இடமளிக்கமாட்டோம்.
இழப்புகளுடனும், உயிர்த் தியாகங்களுடனும்தான் இராணுவத்தினர் நாட்டைக் காப்பாற்றினர். அதில் அரசியல் இலாபம் தேடமுடியாது. இராணுவத்தினர் அரசுக்காகவே சேவை செய்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க அரசுக்குப் பொறுப்புணர்வு உள்ளது.
கேள்வி: சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசிய சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ள முடியாதா?
பதில்: அவ்வாறு இதுவரை கோரவில்லையே. கோரினால் பார்போம்.