விடுதலைப் புலிகளால் மஹிந்தவின் உயிருக்கு அச்சுருத்தல்
தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவில் மீண்டும் தலைதூக்குவது நிச்சயமே என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் நல்லாட்சி அரசாங்கத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,
“கடந்த 2013ஆம் ஆண்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஸ்ரீலங்காவில் மீண்டும் தலைதூக்கும் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக அப்போது செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா இரகசிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனிடையே கடந்த மாதம் 13ஆம் திகதி கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்னாள் போராளிகள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் விடுதலைப் புலிகளை மீள எழச்செய்வதற்கான ஆயதப் போராட்டத்திற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். மரதங்கேனி பிரதேசத்தில் பிரபல நபர் ஒருவரை கொலை செய்வதற்காக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்றையும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர். அதுமட்டுமல்ல மேலும் பல வெடிபொருட்களும் மீட்கப்பட்டன. விடுதலைப் புலிகள் மீள எழுவார்கள் என்பதை நாங்கள் தொடர்ந்தும் கூறிவருகின்றோம். இப்போது புலனாய்வுப் பிரிவும் அதனையே தெரிவிக்கின்றது.
அதனால் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு வலியுறுத்திவந்தாலும் அங்கிருந்து படையினரை மீளழைக்கக்கூடாது.
சமஷ்டி தீர்வைக் கோரிவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கே விடுதலைப் புலிகளிடம் இருந்து மரண அச்சுறுத்தல் காணப்படுமாயின் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்வளது உயிர் அச்சுறுத்தல் காணப்படும்? இந்த நிலையில் விடுதலைப் புலிகளினாலேயே மஹிந்த ராஜபக்சவும் கொலை செய்யப்படட்டும் என்று பாதுகாப்பையும் அரசாங்கம் குறைத்துள்ளது. எனவே முன்னர் இருந்த அதிகளவான பாதுகாப்பை மஹிந்த ராஜபக்சவுக்கு மீள வழங்கும்படி கோரிக்கை விடுக்கின்றேன்|| – என்றார்.