அமெரிக்காவிற்குள் நுழைய ஸ்ரீலங்கர்களுக்கு அனுமதி
அமெரிக்காவுக்குள் நுழைய ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கர்கள் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவினுள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் சிறிலங்கா உள்ளடங்கவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க விமான நிலையங்களில் ஸ்ரீலங்கா பிரஜைகள் தடுக்கப்பட்டதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளன.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் இதுகுறித்து கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பிரஜைகள் அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு உதவிகள் தேவைப்பட்டால் நியூயோர்க்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் 001 917 597 7009 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.




