புதிய அரசமைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து தெளிவுபடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், அந்தத் திட்டத்தை தற்போது அது கைவிட்டுள்ளது.
புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைமீது அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், நாட்டில் நல்லிணக்கம் நிலவுவதற்கும் புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் எனவும், அதற்கு மகாநாயக்க தேரர்கள் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது.
இந்நிலையில், புதிய அரசமைப்புக்கு எதிராகவும், அரசமைப்பு மறுசீரமைப்புக்கு எதிராகவும் மகாநாயக்க தேரர்கள் ஓரணியில் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கும் திட்டத்தை கூட்டமைப்பின் தலைமை தற்போது கைவிட்டுள்ளது என அறியமுடிகின்றது.
இதேவேளை, புதிய அரசமைப்புக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்புக் காட்டுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோது, “மகாநாயக்க தேரர்களும், ஆட்சியில் உள்ளவர்களும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டிருக்கின்ற நிலையில் இது தொடர்பில் கருத்துக் கூற விரும்பவில்லை. முதலில் மகாநாயக்க தேரர்களும் ஆட்சியில் உள்ளவர்களும் நாட்டின் எதிர்கால நன்மை கருதி ஒரு முடிவுக்கு வரவேண்டும்” – என்று தெரிவித்துள்ளார்.