எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, தனது இடைக்கால அறிக்கையை இறுதி செய்யாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம். இடைக்கால அறிக்கையை இறுதி செய்வதற்காக வழிநடத்தல் குழு இரண்டாவது தடவையாக நடத்திய இந்த நீண்ட அமர்விலும் முடிவு எட்டப்படவில்லை.
புதிய அரசமைப்பை உருவாக்கி இலங்கையில் தீர்வு ஒன்றை எட்டும் முயற்சிக்குக் கிடைத்த மேலுமொரு பின்னடைவு இது என்று அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.
புதிய அரசமைப்புத் தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்ட நாடாளுமன்றத்தால் வழிகாட்டல் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக உப குழுக்களும் நியமிக்கப்பட்டன. 6 உப குழுக்களும் தமது அறிக்கையை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முன்வைத்துவிட்டன. அந்த முன்மொழிவுகளையும் அரசின் தன்மை, தேர்தல் முறைமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை போன்ற முக்கிய விடயங்களையும் ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கும் பணி வழிகாட்டல் குழுவிற்கு வழங்கப்பட்டது. இதற்காக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் (மஹிந்த தரப்பு அடங்கலாக)குழுவில் இடமளிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதியே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. இடைக்கால அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டாலும் அது குறித்து அரசியல் தரப்புகளிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. எனவே, இதனை நிவர்த்தி செய்து இடைக்கால அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வழிகாட்டல் குழு இரண்டு தடவைகள் கூடியபோதும் இலக்கு நிறைவேற்றப்படவில்லை.
குழு இரண்டாவது தடவையாக கடந்த 23ஆம் திகதி கூடியது. தொடர்ச்சியாக 4 நாட்களில் 5 அமர்வுகளை நடத்தி இடைக்கால அறிக்கையை இறுதி செய்வது என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மூன்று நாட்கள் மட்டுமே குழு கூடியது. மூன்று அமர்வுகள் மட்டுமே நடந்தன. நான்காவது நாளான கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த அமர்வு கைவிடப்பட்டது. கொழும்பு மற்றும் இடங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் காரணமாக அமர்வு கைவிடப்பட்டதுடன் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய பின்னரே குழு மீண்டும் கூடும் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.
இதன் காரணமாக, இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்திற்குச் சமர்பிக்கப்படுவது மேலும் தாமதமாகியுள்ளது.