நம்பிவந்த எமக்கு ஏமாற்றமே தொடர்கிறது: காணாமல் போனோரின் உறவினர்கள்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து எம்மை வரவழைத்திருந்த போதிலும், இங்கு எமக்கு ஏமாற்றமே தொடர்ந்து வருகிறது என வவுனியா மாவட்டத்திற்கான காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி வனிதா தெரிவித்துள்ளார்.
முக்கிய அமைச்சர்களுக்கும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘காணாமல் போன உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி கடந்த 23ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.
அதன்போது அங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை நம்பி 26ஆம் திகதியுடன் போராட்டத்தை கைவிடப்பட்டோம். ஆனால், அவர் வாக்குறுதியளித்தபடி எதுவும் நடைபெற்றதாக இல்லை. அரசாங்கம் தொடர்ந்தும் கால அவகாசம் கோருகிறதே தவிர இதற்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக இல்லை’ என்றார்.




