தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் : கோவிந்தம் கருணாகரம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர ரீதியான போராட்டத்திற்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்கள் மீண்டும் ஒற்றுமையீனத்தைக் காட்டுவோமாக இருந்தால், அகிம்சை மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்களில் போராடி உயிர்நீத்த உயிர்களுக்கு துரோகம் செய்வதாக அர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு – எருவில் இளைஞர் கழகம், கண்ணகி விளையாட்டுக்கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் சொந்த நிதியிலிருந்து நூலகத்திற்கான ஒரு தொகுதி புத்தகங்களையும் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அவர்களது உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலத்தில் அனைவரும் ஒற்றுமையாக அகிம்சை ரீதியாக போராடி போது, உரிமைகள் கிடைக்கப்பெறாத காலகட்டத்தில் ஆயுத ரீதியான போராட்டத்தில் இறங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்று ஏற்பட்ட ஒற்றுமையீனத்தின் காரணமாகவே, இன்று தமிழ் மக்கள் வட கிழக்கு பிரதேசங்களில் எந்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த ரீதியிலே தான் ஆயுத போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் மௌனிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமையும் இராஜதந்திர ரீதியான போராட்டத்தை முன்னெடுத்து, தமது உரிமைகளை பெறுவதற்கு போராடிக்கொண்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தன், தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பாக மிகவும் சுருக்கமாக, ஆணித்தரமான ஒரு உறுதியான செய்தியினை தெற்குக்கு கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்சவும், அவரது எதிர்க் கூட்டணியினரும் தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வினை கொண்டு வருவதற்காக நாடாமன்றத்தை அரசியல் சாசன சபையாக மாற்றி ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக வேண்டி அனைவரும் சேர்ந்து பிரிக்கப்படாத நாட்டிற்குள் தமிழ் மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய ஒரு தீர்வை இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மகிந்த ராஜபக்ச இதனை குழப்பாமல் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




