புலிக் கொடியைத் தூக்கிக் கொண்டு சிங்கள, முஸ்லிம் மக்களிடமிருந்து நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டாடியதையும் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிடும் அறிக்கைகளையும் கோடிகாட்டியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழர்களிடமாக இருந்தால் என்ன சிங்களவர்களிடமாக இருந்தால் என்ன இனவாதம் தவறானது என்பதை மையமாக வைத்தே அவரது உரை அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்தில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது சொந்த இடத்துக்குத் திரும்ப வேண்டும்.
இராணுவத்தினரின் பிடியில் உள்ள அவர்களது காணிகள் விடுவிக்கப்பட வேண் டும் என்றும் அவர் நியாயமாகத் தனது உரையில் தெரிவித்திருந்தார். எனவே அவரது கருத்துக்களை வெறும் இனவாதக் கருத்தாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.