தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் – எஸ். வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 மேற்பட்ட பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதகுரு ஒருவர் அண்மைக்காலத்தில் இந்து மத குருவொருவரை மிகவும் மோசமான முறையில் அவமானப்படுத்தியதாகக் குறிப்பிட்ட எஸ். வியாழேந்திரன்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து மதகுருமார்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே இந்து மதகுருமார்கள் எழுக தமிழ் பேரணிக்கு தமது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர் பேரவை, பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு அமைப்பினர், பட்டி தொட்டி, கிராமங்கள் வரை அனைவரும் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு கொடுத்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.