எழுக தமிழை தடுத்தவர்கள் மூக்குடைபட்டனர்
மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணியை நடத்துவதற்கு எதிராக பலர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களின் முயற்சி தோல்வியில் நிறைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களே எழுக தமிழ் பேரணிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நேரில் சென்று ஏன் சந்திக்கவில்லையெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்களுக்கான புதிய தலைமை ஒன்று தேவையாகவுள்ளதாக சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக எந்தவொரு நன்மைகளையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லையென அவர் குறிப்பிட்டார்.