விஜயதாசவிற்கு வலை வீசும் மஹிந்த அணி!

நீதியமைச்சர் விஜயதாசவிற்கு எதிராக ஐ.தே.க.வில் அண்மைய நாட்களாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ள நிலையில், அவரை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷனின் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டதாலேயெ நீதியமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச சதித் திட்டத்தின் பேரிலேயே விஜயதாசவிற்கு எதிராக எதிர்ப்புகள் வெடித்துள்ளதாகவும் தான் தனிப்பட்ட முறையில் அவரை ஆதரிப்பதாகவும் பந்துல குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, விஜயதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தமது அணியின் தலைமையிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் பந்துல குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடந்த காலத்தில் அமைச்சர் விஜயதாசவிற்கு எதிராக சேறு பூசிய கூட்டு எதிரணியில் அவர் ஒரு போதும் இணையக் கூடாதென குறிப்பிட்டுள்ள பிரதியமைச்சர் டிலான் பெரேரா, ஐ.தே.க.வில் அவருக்கு இடமில்லாவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *