ஒரு வாரத்திற்குள் வித்தியா கொலை வழக்கின் குற்றப் பத்திரிகை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்றப் பத்திரிகை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அரசதரப்பு வழக்கறிஞர் நாகரத்தினம் நிஷாந்த் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கக்கோரி மேற்படி வழக்கு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒன்பது சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு கோரிய அரசதரப்பு வழக்கறிஞர், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சரத் வல்கம, குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது தரப்பினர்கள் இரு வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், சந்தேகநபர்களை இரண்டு வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் தடுத்து வைக்க அனுமதி வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே அவர்களை தகுந்த பிணையில் விடுவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து நீதிபதி உத்தரவு பிறப்பிக்கையில், மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை குற்றங்களுக்கு உரிய சந்தேகநபர்களின் பிணை தொடர்பில் மேல் நீதிபதிக்கு தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு. எனத் தெரிவித்து சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *