ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பி பிளஸ் கிடைக்க வாய்ப்பில்லை

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டும் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதனூடாக அவர்களது தவறுளை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் அறிவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

விக்ரமபாகு கருணாரத்ன “முன்னைய ஆட்சியின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமல்போனது. மீள எமக்கு அது கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அது தொடர்பில் ஆராய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்ததோடு, ஸ்ரீலங்கா சில விடயங்களை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்திருந்தது. எனினும் தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவைகளை பலாத்காரமாக கைப்பற்றி வைத்திருக்கின்றனர். அதிகாரிகளும் காணிகளை விட்டு செல்வதாக இல்லை. ஜனாதிபதியும் பிரதமரும் இது தொடர்பில் தீர்மானமெடுப்பதில் பின்வாங்குகின்றார்கள்.

அந்த பிரதேசத்தில் குற்றச்செயல்களின் ஈடுபட்டவர்களுக்கு தூதுவர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளை வழங்கி அவர்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இது ஐரோப்பிய நாடாளுமன்றில் முக்கிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. தெற்கில் ரவி ராஜ் கொலை, எக்நெலிகொட காணாமற்போனமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நாம் தெரிவித்து வந்தோம். இதில் இராணுவம் சம்பந்தப்பட்டடுள்ளது. அது தொடர்பிலான உண்மைகள் வெளியாகியுள்ளன.

ஆகவே அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும். மஹிந்த ராஜபக்ச கோட்டாயப உள்ளிட்டவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழலாம். திருகோணமலையில் காணாமற்போன ஐவர் தொடர்பில் எதுவித தகவலும் இல்லை. அதேபோல் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பதில் கூற வேண்டும். இவ்வாறான குற்றச்சாட்டுகள் நடைபெற்றிருக்குமாயின், அது தொடர்பில் விசாரணை செய்யவில்லையாயின் தமது பக்கம் திரும்பிக்கூட பார்க்க வேண்டாமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக பெண் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை. தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றிய அவதானிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள், தமிழ் மக்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் எமக்கு ஒரு சந்தையில்லை.“

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *