வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி வழங்க அமெரிக்கா திட்டம்! – கம்மன்பில குற்றச்சாட்டு

உதய கம்மன்பில

“வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி தீர்வைக் கொடுப்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா. இதற்காக திட்டமிட்ட அடிப்படையில் இங்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

“தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இங்கு செயற்கையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைச் சில நாடுகள் விரும்புகின்றன. அந்த நாடுகளே சதிசெய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“சர்வதேச நெருக்கடிகள் இருந்தபோதிலும், மஹிந்த பொருளாதாரத்தை நல்ல நிலையில் தக்கவைத்திருந்தார். ஆனால், பொருளாதார நிபுணர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தை சீரழித்துக்கொண்டு வருகின்றனர். இதன் வீழ்ச்சியை இன்று கிராம மக்களும் உணரத்தொடங்கிவிட்டனர்.

சர்வதேச நாடுகள் இங்கு நினைத்ததைச் சாதிப்பதற்குப் பொருளாதார வீழ்ச்சியைத் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றன. சீனா அடிமாட்டு விலைக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வாங்கவேண்டுமென்றால் இங்கு பொருளாதார நெருக்கடி இருக்கவேண்டும்.

அதேபோல், திருகோணமலை துறைமுகத்தை இந்தியா வாங்க வேண்டுமென்றாலும் பொருளாதார நெருக்கடி இருக்கவேண்டும். அமெரிக்காவின் விருப்பத்தின்படி வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி தீர்வைக் கொடுக்கவேண்டுமென்றாலும் இங்கு பொருளாதார நெருக்கடி இருக்கவேண்டும்.

ஆகவே, இந்த நாடுகள் தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இங்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதை விரும்புகின்றன. அந்த நாடுகளே சதிசெய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.

வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி தீர்வை வழங்கவேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அந்நாடு இங்கு செயற்கையான முறையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்காக அமெரிக்காவின் நிபந்தனைக்கு இந்த நாட்டு மக்களை இணங்கச்செய்வதன் ஊடாக சமஷ்டியை இலகுவாக நிறைவேற்றிவிடமுடியும்.

இவ்வாறான சர்வதேச சதிகளுக்குள் எமது நாடு இன்று சிக்கித் தவிக்கின்றது. சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணுகின்றோம் என்ற போர்வையில் இந்தச் சதிகளுக்கு இந்த அரசு இடங்கொடுத்து வருகின்றது. இது எதிர்காலத்தில் பாரிய சிக்கலை எமக்கு ஏற்படுத்தப் போகின்றது” – என்று அவர் கூறியுள்ளார்.

 

 

About பார்த்தீபன்

View all posts by பார்த்தீபன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *