2020இல் ஜனாதிபதியாக கோட்டா: அச்சமடைகின்றது தேசிய அரசு! – அதனாலேயே அவரைக் கைதுசெய்ய திட்டம் என்கிறார் மஹிந்தானந்த எம்.பி.

மஹிந்தானந்த அளுத்கமகே
“2020ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகின்றார் என்ற பயத்தின் காரணமாக அவரைக் கைதுசெய்து சிறையிலடைப்பதற்கு தேசிய அரசு திட்டமிட்டுள்ளது.”
 – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-
“மஹிந்த அணிக்கான செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதால் அந்தச் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிடுவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது. அந்தச் செல்வாக்குக்குப் பயந்துதான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களுக்கும் அதே கதிதான்.
கோட்டாபய ராஜபக்ஷ 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரோ என்ற அச்சம் இந்தத் தேசிய அரசுக்கு இருக்கின்றது. அதன் காரணமாக இப்போதிலிருந்தே அவரை அடக்கி ஒடுக்குவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது. அவரைக் கைதுசெய்து சிறையிலடைப்பதற்குச் சதி செய்கின்றது.
அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றது. இந்தக் கீழ்த்தரமான வேலைகளை தேசிய அரசு செய்யக்கூடாது. கோட்டாபயவை கைதுசெய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் ஆதரவு வழங்குவார்களாக இருந்தால் அவர்களைப்போல் மனநோயாளிகள் வேறு எவரும் இருக்கமுடியாது.
இந்தத் தேசிய அரசு கோடிக்கணக்கில் திருடியுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் பதவி விலகவேண்டும். அலோசியஸ் சிறையிலடைக்கப்படவேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று இறுதிநேரத்தில்தான் வெளியிடுவோம். மைத்திரிபால வெற்றிபெற்றமைக்குக் காரணம் இறுதிநேரம்வரை இரகசியம் பாதுகாத்தமைதான். நாமும் அவ்வாறு செய்து வெற்றிபெறுவோம்” – என்று தெரிவித்துள்ளார்.

About பார்த்தீபன்

View all posts by பார்த்தீபன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *