ஹசனலியை மீண்டும் மு.காவுக்குள் கொண்டுவர ஹக்கீம் கடும் பிரயத்தனம்!

ஹக்கீம் - ஹசனலி
தூய முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டாளரான எம்.ரி.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஈடுபட்டுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தூரமாகி இன்று தூய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக மக்கள் மத்தியில் களமிறங்கியுள்ள ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் தரப்பு எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் கூட்டமைப்பாக போட்டியிடுவதற்கான பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மீண்டும் ஹசனலி தரப்பை கட்சியோடு ஒன்றிணைப்பதற்கான பேச்சை அமைச்சர்  ஹக்கீம் முடுக்கிவிட்டுள்ளார்.
அந்தவகையில், தூய முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டாளரான எம்.ரி.ஹசனலியின் சகோதரரும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான எம்.ரி.நிஸாமுடன் மு.காவின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் நீண்டநேரம் உரையாடியுள்ளார்.
“தேசியப்பட்டியல் எம்.பி. பதவியுடன் அமைச்சுப் பதவியும் ஹசனலிக்கு உடன் வழங்குவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என்று இதன்போது அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மு.காவின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான யு.எம்.வாஹீத்தை அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்குத் தூது அனுப்பினார் எனவும் ஒரு கதை உலாவுகின்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யு.எம்.வாஹீத், மு.காவின்  முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலியுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளதுடன், ஹசனலி இராஜாங்க அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் அவரது இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஹசனலி தரப்பு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோருடன் இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பாக போட்டியிடுவதற்குப் பல சுற்றுப்பேச்சுகளை நடத்தியுள்ள நிலையில், தமது கட்சிக்கு இது பெரும் தோல்வியை ஏற்படுத்தும் என்ற பீதியின் காரணமாகவே ஹசனலி தரப்பை மீண்டும் தனது பக்கம் இழுப்பதற்கு மு.காவின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் களத்தில் இறங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

About பார்த்தீபன்

View all posts by பார்த்தீபன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *