காணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம்
கேப்பாபிலவு விமானப்படை அமைந்துள்ள பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், தமது காணிகளை சரியாக அடையாளம் காட்டுவார்களாயின் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை கேப்பாப்புலவு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து மக்கள் போராடி வருவதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 9ஆவது நாளாக இன்றும் நிலமீட்பு போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் இதுகுறித்து வினா எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர் “கேப்பாபிலவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, அவரவர் காணிகளை அடையாளம் காட்டி உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நாம் ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளோம். அவ்வாறு செய்யாது காணிகளை விடுவிக்க முடியாது.
இங்கு சம்பந்தமில்லாதவர்களும் இருக்கலாம். கடந்த காலங்களில் இந்த பகுதியில் 243 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. அத்துடன் வவுனியாவிலும் 16 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலும் காணிகளையும் எம்மால் விடுவிக்க முடியும்;. அதற்காக மக்கள் தமது காணிகளை அடையாளம் காட்டி உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு உறுதிப்படுத்தும் பட்சத்தில் தான் பிரதேச செயலாளர் ஊடாக விமானப்படையினரால் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியுமாக இருக்கும். முகாம் அமைந்துள்ள காணிப்பகுதியில் அரசுக்கு சொந்தமான காணியும் உள்ளது. வனப் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கீழான காணியும் உள்ளது.
இதனால் மக்கள் தமது காணியின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை நாம் மக்களுக்கும் அறிவித்தும், தொடர்ந்தும் போராடுகிறார்கள் எனில் அதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் இருக்கலாம் எனும் சந்தேகமும் எழுகின்றது. ஒருவேளை அது அரசியல் நோக்கமாகவும் இருக்கலாம்” – என்றார்.