தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கும், ராஜபக்ஷவினருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கின்றது. எனவே, இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தில் கீதா குமாரசிங்கவுக்கு ஒருவிதத்திலும், மற்றையவர்களுக்கு ஏனைய விதத்திலும் அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்றதா என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“சுவிட்ஸர்லாந்து நாட்டுப் பிரஜாவுரிமையை கொண்டவர் என்பதற்காக கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இரட்டை பிரஜாவுரிமை வைத்துள்ளனர் என கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளது. அதேபோன்று, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்து கொண்டு இலங்கை பணத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவுக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளது. எனினும், அவர் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். இதுபோன்ற பல ஒப்பந்தங்களில் அவர் கைச்சாத்திட்டுள்ளார்.
அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளது. இவ்வாறான நிலைமையில் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமைய மாத்திரம் எப்படி நீக்க முடியும்?
அப்படியாயின் ராஜபக்ஷாக்களுக்கு ஒரு சட்டம், அமைச்சர்களுக்கு ஒரு சட்டம், கீதா குமாரசிங்கவுக்கு வேறு சட்டமா? இது நியாயமா? எனவே, இந்த விடயத்தில் மக்களே இறுதித் தீர்மானம் எடுக்கவேண்டும்” – என்றார்.