தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை
ஸ்ரீலங்காவில் நல்லாட்சி ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் மீதான மோசமான திணிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பெப்ரவரி 4 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை யாழ். மாவட்ட செயலகத்தில் ஏற்றுகின்ற வேளை, மாவட்ட செயலகத்திற்கு வெளியே அமைதியான முறையில், நடத்தவுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன 20 ஆயிரம் பேர் தொடர்பில் முடிவு தெரிய வேண்டும் என்றும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மேலும் ஆக்கிரமிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும், இனப் படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான விசாரணையை சர்வதேச ரீதியில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு விசாரணையெனின் பெரும்பான்மையான சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்கி விசாரணை மேற்கொள்ளத் தயாரா என ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கேள்விகேட்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணையாளர்கள் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறுகின்ற சூழ்நிலையில், எதிர்ப்பு போராட்டத்தை பெப்ரவரி 4 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.