இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது: சக்திவேல்
இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதென்றும் இவ்விடயத்தில் நல்லாட்சி அரசும் தாம் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் வகையிலேயே செயற்படுகின்றதெனவும் மலையக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் கடந்த இரு வாரங்களை கடந்தும் வீதியில் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு உடனடியாக இம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்டுள்ள முகாமானது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனமல்ல என சுட்டிக்காட்டியுள்ள அருட்தந்தை சக்திவேல், இதனால் மக்களின் வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதென்றும் இப்படி விவசாய நிலங்களை கையகப்படுத்தி வைப்பது அடாவடியும் அராஜகமும் நிறைந்த செயலாகுமெனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்தும் காணி உரிமை அற்றவர்களாக வாழ்ந்துவரும் மலையக மக்களுக்கு காணி உரிமையின் முக்கியத்தும் நன்கு தெரியும் என்றும், எனவே கேப்பாபிலவு மக்களின் போராட்டத்துக்கு மலையக மக்கள் தமது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.