தனிநாட்டுக் கோரிக்கையைப் பலப்படுத்த கூட்டமைப்பு திட்டம் – கெஹெலிய ரம்புக்வெல
தனிநாட்டுக்கான கோரிக்கையைப் பலப்படுத்தவே அரசமைப்புப் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.
புதிய அரசமைப்புக் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது வெற்றியிலோ, தோல்வியிலோ முடிவடைந்தாலும் அது கூட்டமைப்புக்குச் சாதகமாகவே அமையும் எனவும் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
இந்தத் தீர்மானம் ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று நாம் பலமுறை சுட்டிக்காட்டினோம்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல்காலப்பகுதில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த அரசு, தமிழ்த் தலைவர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கக்கூடும்.
அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் ஏற்கப்படாவிட்டால் சிங்கள மக்களின் பெரும்பான்மை, சிறும்பான்மை மக்களைப் பாதிப்பதாக சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் சபையிடம் தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.