பொறுப்புக் கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பின்வாங்குகிறது
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான பொறுப்பு கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பின்வாங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிக்கு மாறான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஸ்ரீலங்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த, மேலும் 18 மாதகால அவகாசத்தை கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரும் கால அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வழங்குமாயின் உறுதிமொழிகளை நிறைவேற்றும் செயற்பாடு ஐ.நா மேற்பார்வையில் மேற்கொள்ளும் வகையிலான தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுடன், திருப்தி அடையவேண்டும் என்பதுமே 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் ஐ.நா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் முன்னர் தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிடும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் காணாமல் போன தமிழர்கள், நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள் உள்ளிட்ட பல விடயங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழலில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதாயின் அதற்கு ஐ.நாவின் மேற்பார்வை அவசியம் என்ற விடயத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.