சைட்டம் பல்கலையை நிராகரிக்க மருத்துவப் பேரவை யார்?
எந்தவித அடிப்படை காரணங்களும் இன்றியே மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டப்பட்டிப்பினை ஏற்பதற்கு ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவை சிலருடன் சேர்ந்து நிராகரித்து வந்ததாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் மாலம்பே பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சிபெற அனுமதியளிக்காமல் அந்த மாணவர்களை மருத்துவர்களாக ஏற்றுக்கொள்ள தகுதியில்லை என்று மருத்துவப் பேரவை கூறுவது பிழையான செயற்பாடாகும் என்றும் அமைச்சர் கண்டித்தார்.
மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டப்படிப்பிற்கு சட்டஅங்கீகாரம் காணப்படுவதாக நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவை, அரச வைத்திய சேவைச் சங்கம் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் சைட்டம் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான வர்த்தமானியை கடந்த ஆட்சியின்போது வெளியிட்டிருந்த தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்றைய தினம் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
“ஸ்ரீலங்காவில் பல்கலைக்கழகங்களில் அனுமதிபெற முடியாத நிலையில் உள்ள குறைவருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குச் சென்று பெரும் சிரமங்களை எதிர்கொண்டு பணத்தை விரயம் செய்து பட்டப்படிப்பினை பெறுகின்றனர். அவர்கள் அனுபவிக்கும் கஸ்டத்தை நான் கண்டிருக்கின்றேன். அதனால்தான் ஸ்ரீலங்காவிலேயே தனியார் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான வர்த்தமானியை நானே வெளியிட்டேன்.
அப்போது அனைத்து விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் அதற்கு விருப்பம் வெளியிட்டபோதிலும், ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவையும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து பட்டம் விற்கும் கடை என்று அதனைக் கூறி போராட்டம் செய்து எதிர்ப்பை வெளியிடுகின்றனர். மாலம்பே பல்கலைக்கழகத்தில் பல்வேறு மருத்துவர்கள், விரிவுரையாளர்களின் பிள்ளைகளும் கற்கின்றனர். எனவே அப்பல்கலைக்கழகத்தில் குறைபாடு காணப்பட்டால் சுட்டிக்காட்டுங்கள்.
மாறாக அந்த பல்கலைக்கழகத்தில் கற்கும் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சிபெற அரச வைத்தியசாலைகளில் அனுமதி வழங்காமல் மருத்துவப் பேரவை அவர்களை நிராகரிப்பது மருத்துவர்களுக்கு இருக்கின்ற சிறந்த பன்பாடு அல்ல” – என்றார்.