மஹிந்த ராஜபக்சவின் மூளையில் குறைப்பாடு: எஸ்.பி தெரிவிப்பு
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பை வெளியிடுவாராயின் அவரின் மூளையில் குறைப்பாடு ஏதும் ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பூரண ஆசிர்வாதத்துடனேயே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய தினம் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “இந்த நாட்டில் சிறந்த பெருபேற்றை பெற்றும் பல்கலைகழகத்தில் மருத்துவக் கல்லூரியை தொடர முடியாமல் பல்வேறு மாணவர்கள் உள்ளனர். இவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே மாலபே தனியார் கல்லூரிக்கு அனுமதியளிக்கப்பட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படுவதில் என்ன தவறு உள்ளது. மருத்துவப் படிப்பை மேற்கொள்ள எண்ணும் அனைவருக்கும் வெளிநாடுகளில் சென்று படிக்க முடியுமா. சாதாரண ஏழை மாணவர்களும் உள்ளனர். இவர்கள் அரச பல்கலைகழகங்களுக்கு உளவாங்கப்படாவிடின் இத்தகைய தனியார் கல்லூரிகளிலேயே வைத்திய கல்வியை கற்க வேண்டியுள்ளது.
அமெரிக்காவில் 3521 தனியார் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவில் 3121 கல்லூரிகளும், நேபாளத்தில் 193 கல்லூரிகளும் உள்ளன. எம்மைவிட வருமையான நாடான பங்களாதேஷில் கூட 51 தனியார் கல்லூரிகளில் மருத்துவக் கல்வியை மேற்கொள்ள முடியும். ஏன் இங்கு மாத்திரம் எதிர்க்கின்றனர்.
வைத்திய சங்கம் தான் இதனை எதிர்கின்றது. அவர்கள் இதற்கு முன்னரும் பலமுறை எதிர்த்திருந்தனர். இங்கு ஊழல், குரோதம் என அனைத்தும் நிறைந்துள்ளது. இந்தக் கல்லூரியின் 1, 2, 3, 4 அணிகள் ரஷ்யாவிலேயே பட்டம் பெற்றுக்கொள்ள அனுப்பட்டனர். ஆனால், 5ஆவது அணிக்கு பட்டமளிக்க இங்கு தீர்மானித்தது. இங்குதான் பிரச்சினை ஏற்பட்டது.
அரச வைத்திய சங்கத்தின் பதிவாளரின் மகள் நான்காவது அணியில் கல்விப் பயின்றார். அரச வைத்திய சங்கத்தின் பதிவாளரான டொரான் சில்வா 4ஆவது அணியை பட்டமளிப்புக்கு உள்வாங்குமாறு அழுத்தம் கொடுத்தார்.
அது சட்டபடி முடியாது என்ற காரணத்தினாலேயே அரச வைத்திய சங்கம் தற்போது எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி இதற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சைட்டம் நிறுவனத்தை ஆரம்பிக்க கடன் பெற்றுக்கொடுத்து பூரண ஆசிர்வாதம் வழங்கியது அவர்தான். தற்போது அவர் எதிர்பாராயின் அவரின் மூளையில் ஏதோ குறைப்பாடு ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.” என்றார்.