காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை
அரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டிற்கு பெற்றுக்கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாகத்திற்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் சிலர் இன்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போதே விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தம்மிடம் தெரிவித்ததாகவும், எனினும் காணிகள் விடப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என தாம் தெரிவித்ததாகவும் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஏழாவது நாளாகவும் மக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.