அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடன் நிறைவேற்றுதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்துகின்றார்.
இவ்விடயம் சம்பந்தமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“வவுனியா மேல்நீதிமன்றத்தில் நான்கு வருடங்களாக இடம்பெற்ற தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு திடீரென சட்டமா அதிபர் திணைக்களம் மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவ்வழக்கை மீளவும் வவுனியா மேல்
நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என்று வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருகின்ற நிலையில் அவர்கள் சிகிச்சைகளுக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களை இந்த நிலைமையில் தொடர்ந்து விடமுடியாது. ஆகவே, அவர்கள் தமது விடுதலையை எதிர்பார்க்கின்றபோதும் தற்போதைக்கு தமது வழக்கு விசாரணைகளை இடமாற்றும் கோரிக்கையையே முன்வைக்கின்றார்கள். ஆகவே, அதில் நியாயப்பாடுகள் இருக்கின்றன.
குறிப்பாக மொழி ரீதியான பிரச்சினைகள், சட்டத்தரணிகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே, இந்த விடயத்தில் இறுக்கமான நிலைப்பாடுகளுடன் இருப்பது பொருத்தமற்ற செயற்பாடு என்பதோடு தமிழ் மக்கள் அனைவரும் நல்லாட்சி அரசின்
மீது வைத்துள்ள அபிமானத்துக்கும் நம்பிக்கைக்கும் பெரும் பாதமாக அமைந்துவிடும்.
எனவே, அந்த அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டத்தை உடன் நிறைவுக்கு கொண்டுவரும் முகமாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு நாட்டின் பிரதமாராகிய தங்களிடத்தில் கோருவதோடு ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல் ரீதியான முடிவொன்றை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் விநயமாக வேண்டிக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.